யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி: இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலைநிறுத்தப்படும்; எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்; மக்களினங்கள் அதை நோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள். வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து, `புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்; யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம்; அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்' என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்; எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும். அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்; அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளைக் கருக்கு அரிவாள்களாகவும் அடித்துக்கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.
பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்..
1 `ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்' என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம்.. -பல்லவி ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். 5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள்.. -பல்லவி எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக் கொள்ளுங்கள்; உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! 7 உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உன் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!"-பல்லவிஉன்னுள் சமாதானம் நிலவுவதாக!'' என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன். 9 நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். -பல்லவி
சகோதரர் சகோதரிகளே, இறுதிக்காலம் இதுவே என அறிந்துகொள்ளுங்கள்; உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததைவிட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது. இரவு முடியப்போகிறது; பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்துகொள்வோமாக! பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்துகொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காம வெறி, சண்டைச் சச்சரவு ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்.
அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிடமகன் வருகையின் போதும் இருக்கும். வெள்ளப்பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப் படுவார். இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்."
அந்நாளில் ஆண்டவரால் துளிர்க்கும் தளிர், அழகும் மேன்மையும் வாய்ந்ததாய் இருக்கும்; நாட்டில் விளையும் நற்கனிவகைகள், இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின் பெருமையும் மேன்மையுமாய் அமையும். அந்நாளில் சீயோனில் எஞ்சியிருப்போரும், எருசலேமில் தப்பி வாழ்வோரும், "புனிதர்" எனப் பெயர் பெறுவர்; உயிர் பிழைப்பதற்கென்று எருசலேமில் பெயர் எழுதப்பட்டோரும் "புனிதர்" எனப்படுவர். என் தலைவர் சீயோன் மகளின் தீட்டைக் கழுவித் தூய்மைப்படுத்துவார்; நீதியின்படி தீர்ப்பிடும் அவரது தன்மையாலும் நெருப்புத்தணலையொத்த அவரது ஆற்றலாலும் எருசலேமின் இரத்தக்; கறைகளைக் கழுவி அதனைத் தூய்மைப்படுத்துவார். சீயோன் மலையின் முழுப்பரப்பின் மேலும், அங்கே கூடிவரும் சபைக் கூட்டங்கள் மேலும், மேகத்தை ஆண்டவர் பகலில் தோற்றுவிப்பார்; புகைப்படலத்தையும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஒளிச் சுடரையும் இரவில் ஏற்படுத்துவார்; ஏனெனில், அனைத்து மாட்சிக்கு மேல் ஒருவிதான மண்டபம் இருக்கும். அது பகல் வெப்பத்தினின்று காக்கும் நிழலாகவும், புயல்காற்றுக்கும் மழைக்கும் ஒதுங்கும் புகலிடமாகவும் அரணாகவும் அமையும்.
பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்..
1 `ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்' என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். -பல்லவி தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்,நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். -பல்லவி4 ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். 5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். -பல்லவி 6 எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக் கொள்ளுங்கள்; உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! 7 உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உன் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!" -பல்லவி 8 "உன்னுள் சமாதானம் நிலவுவதாக!'' என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன். 9 நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். -பல்லவி
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளே, எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும். எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும். அல்லேலூயா.
அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார். அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர். அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர் மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார். பேச்சற்றோர் பேசுவதையும் உடல் ஊனமுற்றோர் நலமடைவதையும் பார்வையற்றோர் பார்க்கிறதையும் கண்டு மக்கள் கூட்டத்தினர் வியந்து இஸ்ரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். இயேசு தம் சீடரை வரவழைத்து, நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்'' என்று கூறினார். அதற்குச் சீடர்கள் அவரிடம், இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்?'' என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?'' என்று கேட்டார். அவர்கள், ஏழு அப்பங்கள் உள்ளன; சில மீன்களும் இருக்கின்றன'' என்றார்கள். தரையில் அமருமாறு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார். பின்பு அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள். அனைவரும் வயிறார உண்டனர். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர்.
ஆண்டவருக்குரிய நாளில் ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர் விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனி தரும். ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத் திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு - இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும். அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார். கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்; காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்; நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்; நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்; வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்; உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார். நேர்மை அவருக்கு அரைக்கச்சை; உண்மை அவருக்கு இடைக்கச்சை. அந்நாளில், ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்; அக்குட்டியோடு சிறுத்தைப்புலி படுத்துக்கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்; பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்; அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்; பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்; பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும். என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை; கேடு விளைவிப்பார் யாருமில்லை; ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும். அந்நாளில், மக்களினங்களுக்குச் சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப் பிற இனத்தார் தேடி வருவார்கள்; அவர் இளைப்பாறும் இடம் மாட்சி நிறைந்ததாக இருக்கும்.
பல்லவி: ஆண்டவருடைய காலத்தில் நீதியும் சமாதானமும் தழைத்தோங்கும்.
கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக!உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! -பல்லவிஅவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லைவரைக்கும் அவர் அரசாள்வார். -பல்லவிதம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். -பல்லவிஅவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர்மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! -பல்லவி
அல்லேலூயா, அல்லேலூயா! இதோ! நம் ஆண்டவர் வல்லமையுடன் வருவார்; தம் ஊழியரின் கண்களுக்கு ஒளி தருவார். அல்லேலூயா.
அக்காலத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகையடைந்து, தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்'' என்றார். �என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்'' என்று கூறினார். பின்பு அவர் தம் சீடர் பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக, �நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர். ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று கூறினார்.
யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட காட்சி; இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்; எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்; மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள். வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து "புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்; யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்" என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்; எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும். அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்; அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்;
பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்
"ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம் ", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம்.-பல்லவிஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். -பல்லவி எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; "உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!-பல்லவி உன்னுள் சமாதானம் நிலவுவதாக!" என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன். நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன்.-பல்லவி
இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். "ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்" என்றார். இயேசு அவரிடம், "நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் "செல்க" என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம்" வருக" என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து" இதைச் செய்க" என்றால் அவர் செய்கிறார்" என்றார். இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோப்பு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.
திருத்தூதர் புனித அந்திரேயா திருவிழா - திருப்பலி
சகோதரர் சகோதரிகளே, `இயேசு ஆண்டவர்' என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர். ஏனெனில், ``அவர்மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்'' என்பது மறைநூல் கூற்று. இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை; அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார். ``ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர்'' என்று எழுதியுள்ளது அல்லவா? ஆனால் அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தாலன்றி, அவர்கள் எவ்வாறு அவரை நோக்கி மன்றாடுவார்கள்? தாங்கள் கேள்வியுறாத ஒருவர்மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? அறிவிக்கப்படாத ஒன்று பற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்? இதைப் பற்றியே, ``நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன'' என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆயினும் எல்லாருமே நற்செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை. இதைக் குறித்தே எசாயா, ``ஆண்டவரே, நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்?'' என்று முறையிடுகிறார். ஆகவே அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும். கிறிஸ்துவைப் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால்தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு. அப்படியானால், அவர்கள் கேள்விப்படவில்லை என்று சொல்ல முடியுமோ? எப்படிச் சொல்ல முடியும்? ஏனெனில், ``அவர்களது அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவர்கள் கூறும் செய்தி உலகின் கடை எல்லை வரை எட்டுகின்றது.''
பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.
1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. -பல்லவி 3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது. -பல்லவி
அல்லேலூயா, அல்லேலூயா! என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, ``என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்'' என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார். உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு; நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்; வாயில்களைத் திறந்துவிடுங்கள்; அவர்மீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும். அவர்கள் மன உறுதி கொண்டவர்கள்; உம்மீது நம்பிக்கை உடையவர்கள்; அவர்களை அமைதியால் நீர் உறுதிப்படுத்துகின்றீர். ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்; ஏனெனில், ஆண்டவர், என் ஆண்டவர், என்றும் உள்ள கற்பாறை! உயரத்தில் வாழ்வோரை அவர் தாழ்த்துகின்றார்; வானுற உயர்ந்த நகரைத் தகர்க்கின்றார்; அதைத் தரைமட்டமாக்கி, புழுதியோடு புழுதியாக, மண்ணோடு மண்ணாகச் செய்கின்றார். எளியோரின் காலடிகளும் ஏழைகளின் பாதங்களும் அதை மிதிக்கும்.
பல்லவி: ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்.
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்! உயர் குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! -பல்லவிநீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன். ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர். என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். -பல்லவிஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்! ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். ய ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். -பல்லவி
'
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "என்னை நோக்கி, `ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.''
இறைவனாகிய ஆண்டவர் கூறுவது: இன்னும் சிறிது காலத்தில் லெபனோன் வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ? வளம்மிகு நிலம் காடாக ஆகிவிடுமன்றோ? அந்நாளில் காது கேளாதோர் ஏட்டுச் சுருளின் வார்த்தைகளைக் கேட்பர்; பார்வையற்றோரின் கண்கள் காரிருளில் இருந்தும் மையிருளில் இருந்தும் விடுதலையாகிப் பார்வை பெறும். ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்; மானிடரில் வறியவர் இஸ்ரயேலின் தூயவரில் அகமகிழ்வர். கொடியோர் இல்லாதொழிவர்; இகழ்வோர் இல்லாமற் போவர்; தீமையில் நாட்டம் கொள்வோர் அழிந்து போவர். அவர்கள் ஒருவர்மேல் பொய்க் குற்றம் சாட்டி, நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை இடறச் செய்கின்றனர்; பொய் புனைந்து நேர்மையாளரின் வழக்கைப் புரட்டுகின்றனர். ஆதலால் ஆபிரகாமை மீட்ட ஆண்டவர் யாக்கோபு வீட்டாரைப்பற்றிக் கூறுவது: இனி யாக்கோபு மானக்கேடு அடைவதில்லை; அவன் முகம் இனி வெளிறிப் போவதுமில்லை. அவன் பிள்ளைகள் என் பெயரைத் தூயதெனப் போற்றுவர்; நான் செய்யவிருக்கும் என் கைவேலைப் பாடுகளைக் காணும்போது யாக்கோபின் தூயவரைத் தூயவராகப் போற்றுவர்; இஸ்ரயேலின் கடவுள்முன் அஞ்சி நிற்பர். தவறிழைக்கும் சிந்தைகொண்டோர் உணர்வடைவர்; முறுமுறுப்போர் அறிவுரையை ஏற்றுக்கொள்வர்.
பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? -பல்லவிநான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித்தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காணவேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். -பல்லவி13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. -பல்லவி
அக்காலத்தில் இயேசு தம் சொந்த ஊரை விட்டு வெளியே சென்றபோது பார்வையற்றோர் இருவர், �தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்'' என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, �நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், �ஆம், ஐயா'' என்றார்கள். பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, �நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்'' என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி, �யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார். ஆனால் அவர்கள் வெளியே போய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.
ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார் ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், நம் கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும், துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும், சீயோனில் அழுவோர்க்கு ஆவன செய்யவும், சாம்பலுக்குப் பதிலாக அழகுமாலை அணிவிக்கவும், புலம்பலுக்குப் பதிலாக மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும், நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாகப் புகழ் என்னும் ஆடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பியுள்ளார். நேர்மையின் தேவதாருகள் என்றும் தாம் மாட்சியுறுமாறு ஆண்டவர் நட்டவை| என்றும் அவர்கள் பெயர் பெறுவர்.
சகோதரர் சகோதரிகளே, நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப் பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மன நிறைவே அக்கைம்மாறு நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம்கூடப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிதுவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக்கொண்டேன். வலுவற்றவர்களைக் கிறிதுவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.
அக்காலத்தில் இயேசு பதினொருவருக்கும் தோன்றி, ``உலகெங்கும் சென்று படைப்பிற் கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்'' என்று கூறினார். இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்..