காலையில் கண்விழிக்கும் போது ஜெபம்
சேசு மரியாயே சூசையே ! உங்கள் அடைக்கலத்திலே ! நான் கண்விழித்து ! இன்று யாதொரு பொல்லாப்பைக் காணாமலும் ! நினையாமலும் செய்யாமலும் இருக்கக் கடவேனாக ! சேசு மரியாயே சூசையே ! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.
படுக்கையில் இருந்து எழுத்திருக்கிற போது ஜெபம்
இயேசுநாதருடைய திருநாமத்தினாலே எழுத்திருக்கிறேன். படுக்கையில் இருந்து எழுந்தது போல பாவத்தை விட்டெழுந்து, மறுபடியும் நான் பாவத்தில் விழாதபடிக்கு என்னைத் தற்காத்தருளும் சுவாமி.
ஆடை அணியும்போது ஜெபம்
ஆண்டவரே இந்த சரீரத்தை மூட வஸ்திரம் கொடுத்தது போல ஆத்துமத்தை அலங்கரிக்க உமது கருணை பிரசாதத்தைக் கொடுத்தருளூவீராக.
காவல் தூதரை நோக்கி செபம்
எனக்குக் காவலாய் இருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே ! தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து வழிநடத்தி ஆண்டருளும். -ஆமென்.
உணவருந்தும் முன்பு ஜெபம்
சர்வேசுரா சுவாமி! என்னையும் உமதருளினால் நான் உண்ணப்போகும் இந்த உணவையும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து ஆசீர்வதித்தருளும் -ஆமென்.
உணவருந்திய பின்பு ஜெபம்
சதாகாலத்துக்கும் நித்தியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற சர்வ வல்லபமுள்ள இறைவா! தேவரிர் எனக்குத் தந்தருளின இந்த ஆகாரங்களுக்காகவும் தேவரிர்; எனக்குச் செய்துவருகிற சகல உபகாரங்களுக்காகவும் தேவரீருக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறேன். இப்பொழுதும் எப்போழுதும் ஆண்டவருடைய திரு நாமம் வாழ்த்தப்படக்கடவது.
வேலை துவங்கும் முன்பு ஜெபம்
தூய ஆவியே தேவரீர் எழுந்தருளிவாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும். அவைகளில் சிநேக அக்கினியை மூட்டியருளும். உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும். அதனால் உலகத்தின் முகத்தைப் புதுப்பிப்பீர். ஜெபிப்போமாக சர்வேசுரா சுவாமி! விசுவாசிகளுடைய இருதயங்களை பரிசுத்த ஆவியின் பிரகாசத்தால் படிப்பித்தருளினீரே. அந்த பரிசுத்த ஆவியினால் சரியானவைகளை உணரவும், அவருடைய ஆறுதலால் எப்பொழுதும் மகிழ்ந்திருக்கவும் அனுக்கிறகம் செய்தருளும். இவைகளையெல்லாம் எங்களாண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் -ஆமென்.
வேலை முடிந்தபின்பு செபம்
சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலும் நாங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு நீர் பாராமுகமாயிராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சம் உடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே சகலஆபத்துக்களிலேயும் நின்று எங்களை தற்காத்தருளும். -ஆமென்
பிற்பகல் 3 மணிக்கு பொருத்தமான சிறு ஜெபம்
இயேசுவே! நீர் மரீத்தீர். ஆனால் இந்த மரிப்பு ஆன்மாக்களின் வாழ்க்கை ஊற்றாகவும், இரக்கத்தின் கடலுமாகவும், வழிந்தோடியது. ஓ! வாழ்வின் ஊற்றே! கண்டு பிடிக்க முடியாத இறைவனின் இரக்கமே! உலக முழுமையும் உம்முள் அடக்கி உமது இரக்கம் முழுமையும் எம்மீது பொழிந்தருளும். இயேசுவின் இதயத்திலிருந்து இரக்கத்;தின் ஊற்றாக வழிந்தோடும் இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
ஆபத்தான வேளையில் அன்னையை நோக்கி ஜெபம்
நிரந்தர சகாயத்தின் நேச ஆண்டவளே! மாசணுகாத்தாயே உம்மை நாங்கள் இவ்வீட்டின் ஆண்டவளாகவும், எஜமாட்டியாகவும் தெரிந்து கொள்கிறோம். கொள்ளை நோய், இடி, மின்னல் புயல் காற்றிலிருந்தும் விமானத்தாக்குதல் விரோதிகளின் பகை குரோதத்திலிருந்தும் இவ்வீட்டைப் பாதுகாத்தருளும், மிகவும் அன்புள்ள தாயே! இங்கு வசிக்கிறவர்களை ஆதரியும். அவர்கள் இங்கிருந்து வெளியில் போகும் போதும், உள்ளே வரும் போதும் அவர்களுக்குத் துணையாயிருந்து சடுதி மரணத்தினின்றும் அவர்களை இரட்சியும், எங்களை சகல பாவங்களிலும் ஆபத்துக்களிலும் நின்றும் காப்பாற்றும். இவ்வுலகில் நாங்கள் சர்வேஸ்வரனுக்கு பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து உம்மோடு கூட நித்தியத்திற்கும் அவரின் இன்பமான தேவ தரிசனத்தை அடைந்து சுகிக்க எங்களுக்காகப் பிரார்த்தித்தருளும் தாயே! - ஆமென்
அனுதின வேலைகளை ஒப்புக் கொடுக்கும் செபம்
தெய்வீகத் தொழிலாளியாகிய இயேசுவே, அடியேன் இன்று செய்யும் ஜெபங்களையும், தொழில்களையும், எனக்கு ஏற்படும் களைப்பு,ஆயாசம், துன்ப வருத்தங்கள் அனைத்தையும், தொழிலாளிகளின் மனந்திரும்புதலுக்காகவும், அர்ச்சிப்புக்காகவும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன். -ஆமென். இயேசுவின் திரு இருதயமே, உமது அரசு வருக ! நாசரேத்து அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். தொழிலாளரின் மாதிரியாகிய புனித சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இயேசுவை நோக்கி இரக்கத்திற்கான ஜெபம்
ஆண்வராகிய இயேசுவே, எங்கள் மேல் இரக்கம் வையும். எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்களைத் தீர்ப்பிடாதேயும். எங்கள் மூதாதையர், எங்கள் சகோதர, சகோதரிகள் வழி வந்த எல்லாக் குற்றங் குறைகளையும், பாவங்களையும், மன்னித்தருளும். எங்களுக்கு வரப்போகும் தண்டனையை விலக்கி விடும். எங்களை உமது சொந்தப் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு உமது ஆவியால் எங்களை வழி நடத்தியருளும்
தூய ஆரோக்கிய இயேசு பாலனிடம் மன்றாட்டு
இனிய இயேசுபாலனே, உம்மை நேசித்து ஆராதித்து உம்முடனே எனது துயரங்களைப் பகிர்ந்து கொள்ள தாழ்ச்சியுடன் வருகிறேன். எனக்குத் தேவையான உதவியை அன்புடன் தருவீர் என்னும் நம்பிக்;கையுடன் வருகிறேன். ஏனெனில் உம்மால் இயலாதது ஒன்றும் இல்லை. பாவத்தினுடையவும், சாத்தானுடையவும் அடிமைத் தனத்திலிருந்து எங்களை மீட்கும்படி எங்கள் மனித சுபாவத்தை எடுத்து எங்கள்மேல் உள்ள அன்பால் நீர் பலவீனர் போல் ஆனீர். உமது நன்மைத்தனத்தில் நாங்கள் நம்பிக்கை வைத்து, "தந்தாய், இந்த கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றியருளும். ஆயினும் என் மனதின்படி அல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகட்டும்" என்று நீர் மரண அவஸ்;தைப்படும் போது சொன்னதையே நானும் சொல்கிறேன். சிறுவர்களுக்கு உமது அரசைத்தருவதாக வாககளித்தீரே. சிறுமை நிறைந்த என்னை கண்ணோக்கும். எனது துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவீராக. இவ்விதம் நான் நட்பில் உமது நண்பனாக வளர்வேன். உமது நட்பை பரகதியில் என்றென்றும் அனுபவிப்பேனாக. - ஆமென்.
குழந்தை சேசுவின் புதுமை நிறைந்த செபம்
அற்புத குழந்தை சேசுவே! அமைதி அற்ற எங்கள் உள்ளங்களின் மேல் உம் கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து, பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த வரத்தை அளித்தருளுமாறு உம்மை இறைஞ்சுகிறோம். (வேண்டிய வரத்தை இங்கு குறிப்பிடுக) எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும், வேதனை, சோதனைகளையும், நீக்கி உம் குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உம் ஆறுதலையும் ஆதரவையும் பெற்று தந்தையோடும் தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக! குழந்தை சேசுவே! என் செபத்தை ஏற்றருளும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். - ஆமென்
சதா சகாயமாதாவுக்கு புகழ்மாலை
உற்சாக நம்பிக்கை ஊட்டும் உயர்திரு நாமம் உடைத்தான இடைவிடா சகாய மாதாவே, எனக்கு சகாயமாக வாரும் சகாயமாதாவே ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த பரிசுத்த மரியாயே நான் சோதனையில் அகப்பட்டுத் தத்தளிக்கும் ஆபத்தான வேளையில் நான் அதனை ஜெயம் கொள்ளும்படி . . . எங்களுடைய முழுமனதுடன் இயேசுவை நேசிப்பதற்கு . . . நான் யாதொரு பாவத்தில் விழும் நிர்ப்பாக்கியத்துக்கு உள்ளாவேனாகில் அதினின்று தப்பி சீக்கிரம் எழுந்திருக்கும்படி. . . பசாசின் ஊழியத்தில் ஈடுபடும் படியான சகாத தளையில் நான் சிக்கிக் கொள்வேனாகில் அத்தளையை தகர்த்தெறியும்படி . . . தீவிர பக்தி உருக்கமில்லாமல் வெதுவெதுப்பான சீவியம் சீவிப்பேனாகில் நான் சீக்கிரம் ஞான உ:;ணம் கொள்ளும்படி . . . நான் அடிக்கடி தேவதிரவிய அனுமானங்களைப் பெறுவதிலும் கிறிஸ்தவப் பக்திக்குரிய கடமைகளைப் பக்தியாய் செய்வதிலும் .. வியாதியின் வருத்தத்தால் தளர்ந்த என் இருதயம் பலவீனமாய் இருக்கும்போது . . . என் சீவியத்தில் வரும் துன்ப சோதனைகளிலும் . . . என்னுடைய சுபாவ துர்செய்கைகளோடு நான் போராடும் வேளைகளிலும், நன்னெறியில் கடைசி வரைக்கும் நிலை நிற்கும்படி நான் செய்யும் முயற்சிகளிலும் . . . என்னைப் பாவத்தில் வீழ்த்த பசாசுக்கள் செய்கிற துஷ்டத்தனத்தினாலும் தந்திரத்தினாலும் என்பலம் குறைந்து போகும்போது . . . இவ்வுலகில் உள்ளதெல்லாம் என்னைக் கைவிட நான் கடைசி மூச்சை வாங்கி என் ஆத்துமம் என் சரீரத்தை விட்டுப் பிரியப் போராடும் போது . . . உம்மை நான் எப்பொழுதும் நேசித்து, ப+ஜித்து, சேவித்துப் பிரார்த்திக்கும்படி . . . ஓ! என் தேவதாயாரே என் கடைசிநாள பரியந்தம் என் கடைசி மூச்சு பரியந்தம் . . . செபிப்போமாக சர்வ வல்லமையும், தயாள சமுத்திரமுமாகிய சர்வேசுரா சுவாமி! மனுக்குலத்திற்குத் துணைபுரியும் வண்ணம் ஆசர்வதிக்கப்பட்ட கன்னிமரியாவை உமது ஏகக் குமாரனுக்கு மாதாவாக்கத் திருவுளமானீரே! இவருடைய வேண்டுதலால், அடியோர்கள் பாவ கொள்ளை நோயைத் தீர்த்து பரிசுத்தமான இருதயத்தோடு உம்மை சேவிக்கும் வரத்தை எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து நாதர் வழியாக எங்களுக்கு கட்டளையிட்டருளும்படி தேவரீரை மன்றாடுகிறோம். -ஆமென்.
தூய அந்தோணியாரை நோக்கிபொது மன்றாட்டு
எங்கள் பாதுகாவலரான தூய அந்தோணியாரே, இறைவனின் அன்புள்ள அடியாரே கிறிஸ்து பாலகனை கையில் ஏந்தும் பேறுபெற்ற தூயவரே, திருமறையை ஆர்வமுடன் போதித்த சிறந்த போதகரே தப்பறைகளை தகர்த்தெறிந்த வித்தகரே, இறைவனின் தனி அருளால் அலகையை ஓட்டுபவரே, துன்புறுவோரின் துயர் துடைப்பவரே, பாவியராகிய நாங்கள் உமது உதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம். புதுமை வரம் பெற்றிருக்கும் எம் ஞானத்தந்தையே! நம்பிக்கையுடன் உம்மிடம் ஓடி வந்துள்ள உம் பிள்ளைகளின் மனறாட்டுக்களை கேட்டருளும். உமது ஆதரவை நாடி வந்துள்ள உம் அடியார் எம்மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம், பிணி, வறுமை, சிறுமை ஆகியற்றால் வாடி வந்திருக்கும் எங்களுக்கு உதவியருளும். அழுவோரின் கண்;ணீரைத் துடைத்தருளும். நோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும். எங்கள் அன்புக்குரிய தூய அந்தோணியாரே! இறைவனின் திருவுளப்படி எப்பொழுதும் நீர் நடந்தது போல நாங்களும் இன்பத்திலும் துன்பத்திலும் எப்பொழுதும் அவரது திருவுளத்துக்கு இசைந்து நடக்கவும், நீர் தூய வாழ்வு வாழ்ந்தது போல, நாங்களும் ஒருவருக்கும் வஞ்சகம் நினையாமலும், செய்யாமலும் தீமையை அகற்றி புனிதராய் வாழவும், திருச்சபை தளைக்கவும், நாடு செழிக்கவும், நாங்கள் நேர்மையுடன் உழைக்கவும், மக்கள் யாவரும் மெய்யங்கடவுளைக் கண்டறிந்து, தக்க முறையில் அவரை வழிபடவும் எங்களுக்காக இயேசுவை வேண்டியருளும். எங்களையும் எங்கள் குடும்பங்களையும், எங்கள் தொழில் முயற்சிகளையும், உழைப்பினையும் ஆசீர்வதித்தருளும். எங்கள் விண்ணப்பங்கள் நிறைவேற எங்களுக்காக இறைவனை மன்றாட வேண்டுகிறோம். - ஆமென்.
புனித மிக்கேல் தேவதூதருக்கு ஜெபம்
அதிதூதரான புனித மிக்கேலே, யுத்த நாளில் எங்களைக் காப்பாற்றும் பசாசின் பட்டனத்திலும் கண்ணிகளிலும் நின்று எங்களை காத்தருளும். இறைவன் அதைக் கடிந்து கொள்ளும்படி தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். வானுலகசேனைக்கு அதிபதியாயிருக்கின்ற நீர்; ஆன்மாக்களை நாசஞ் செய்யும்படி உலகெங்கும் சுத்தித்திரியும் சாத்தானையும் மற்றும் பசாசுகளையும் தெய்வ வல்லமையைக் கொண்டு நரகபாதாளத்தில தள்ளிவிடும். . -ஆமென்.
வல்லமை மிக்க செபம்
நெஞ்சுக்கும் மார்புக்கும் நிறைந்த சிலுவை! நீச பிசாசுகளை விரட்டிடும் சிலுவை சிலுவை அடியில் தலையை வைத்தேன். திருவிரலால் உடலை வைத்தேன். எனக்கு உதவியாக வாரும் திருச்சிலுவை ஐயாவே! - ஆமென். குருசான குருசே! கட்டுண்ட குருசே! காவலாய் வந்த குருசே! தொட்டியிலும், தண்ணீரிலும், சிங்கார மேடையிலும், துன்பப்படுத்தும் பிசாசுகளையும், எங்களை அறியாமல் எங்களுக்குத் தீமை செய்கிறவர்களையும் துரத்தி விடும் சிலுவையே! மூன்றாணி! மூன்றாணி! மூன்றாணி!
புனித சூசையப்பருக்கு செபம்(பழமையானது)
புனித சூசையப்பரே! உம் அடைக்கலம் மிகவும் மகத்தானது. வல்லமை மிக்கது. இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது. ஏனவே என் ஆசைகளையும், எண்ணங்களையும் உம் அடைக்கலத்தில் வைக்கிறேன். உம் வல்லமை மிக்க பரிந்துரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய சேசுவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத்தாரும். இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலைப் போற்றி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும், ஆராதனையும் செலுத்தக் கடவேன். புனித சூசையப்பரே! உம்மையும் உம் திருக்கரங்களில் உறங்கும் சேசுவையும் சதா காலமும் எண்ணி பூரிப்படைய தயங்கியதில்லை. இறைவன் உம்மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. உம் மார்போடு அவரை என் பொருட்டு இணைத்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும். நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்குத் தரும்படி கூறும். மரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலனே எங்களுக்காக மன்றாடும். -ஆமென்.
சமாதானத்திற்கான செபம்
என்னை உம்முடைய சமாதானத்தின் தூதனாக மாற்றியருளும் ; பகையுள்ள இடத்தில் பாசத்தையும் ; துரோகம் உள்ள இடத்தில் மன்னிப்பையும் ; சந்தேகம் உள்ள இடத்தில் விசுவாசத்தையும் ; அவ நம்பிக்கை உள்ள இடத்தில் நம்பிக்கையையும் ; இருள் சூழ்ந்த இடத்தில் ஒளியையும் ; துக்கம் நிறைந்த இடத்தில் மகிழ்ச்சியையும் ; நான் விதைத்தருள அருள் தாரும். அன்பு தெய்வமே, ஆறுதல் பெறுவதைவிட, ஆறுதல் அளிக்கவும் ; புரிந்துகொள்ள விரும்புவதைவிட புரிந்து கொள்ளவும் ; அன்பு செய்யப்பட விரும்புவதை விட அன்பு செய்யவும் ; எனக்கு ஆற்றல் தாரும். ஏனெனில் ; கொடுக்கும் போதுதான் நாம் பெறுகிறோம் ; மன்னிக்கும் போதுதான் ; மன்னிப்பை அடைகிறோம் ; இறக்கும் போதுதான் ; முடிவில்லா வாழ்வுக்குப் பிறக்கிறோம். ஆமென்.
தம்பதிகளின் செபம்
அன்புத் தந்தையே இறைவா, எங்கள் குடும்ப வாழ்வை உமக்கு சமர்ப்பிக்கிறோம், எங்கள் கடந்த கால வாழ்வின் குறைகளை உணர்ந்து அவற்றை திருத்திக் கொள்ள உதவி புரியும். உண்மையான மகிழ்ச்சியையும், குழந்தை பாக்கியத்தையும் எங்களுக்கு அளித்தருளும். குடும்பத்தை நல்லதொரு குடும்பமாக மாற்றவல்ல இறை சிந்தனையும், அதற்கு உயிரளிக்கும் மெய்யான அன்பையும் எங்களுக்கு அளித்தருளும். குடும்ப வாழ்வை சிதைக்கும் தவறான புரிந்துகொள்ளுதல், நம்பிக்கை துரோகம், தீய பழக்க வழக்கங்கள் இவற்றிலிருந்து மீட்டருளும். குழந்தைகளை நேர்வழியில் நடத்தவும், வாழ்வின் கடமைகளை நிறைவேற்றவும் தேவையான திறமையும் பொறுப்புணர்ச்சியும் எங்களில் உருவாக்கும். நாசரேத்தூர் திருகுடும்பத்தைப் போல செபத்திலும், அன்பிலும், சகிப்புத் தன்மையிலும் பொறுமையிலும் எங்களை வளர்த்தியருளும். அன்பு இயேசுவே, நீர்தாமே எங்கள் குடும்பத் தலைவரும் மீட்பருமாக இருந்தருளும். ஆமென்.
குடும்பங்களை அர்ப்பணிக்கும் செபம்
இயேசுவின் திருஇருதயமே, இக்குடும்பத்தையும் எங்கள் ஒவ்வொருவரையும் உமக்கு அர்பணிக்கிறோம். எங்கள் குடும்பத்தில் நீர் அரசராக ஆட்சி செய்யும். எங்களுடைய செயல்களையெல்லாம் நீர்தாமே பொறுப்பெடுத்துக்கொள்ளும். எங்களுடைய கடமைகள் அனைத்தையும் ஆசீர்வதியும். எங்களுடைய மகிழ்ச்சியை தூய்மைப்படுத்தும். வருத்தங்களில் ஆறுதல் தாரும். எங்களில் யாராவது உம்மைப் புண்படுத்த நேர்ந்தால் எங்களை மன்னியும். இக்குடும்பத்தினரையும், இங்கிருந்து அகன்றிருப்போரையும் நிறைவாய் ஆசீர்வதியும். இறந்துபோன எங்கள் குடும்பத்தினரை நித்திய பேரின்பத்திற்குள் நுழையச் செய்யும். விண்ணகத்தில் உம்மைக் கண்டு மகிழ எங்களுக்கு உதவி புரியும். ஆன்ம சரீர விபத்துகள் அனைத்திலிருந்தும் எங்களைக் காத்தருளும். மரியாளின் மாசற்ற இருதயமே, புனித சூசையப்பரே எங்களுடைய இந்த அர்ப்பணத்தை இயேசுவின் திரு இருதயத்திற்கு சமர்ப்பித்து வாழ்நாள் முழுவதும் இதன் அழியா நினைவை எங்களில் நிலைநிறுத்தியருளும். ஆமென்.
குழந்தை வரத்திற்காக செபம்
தியானிக்க : 7அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள். 11அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர் தூப பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத் தோன்றினார். 12அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார். 13வானதூதர் அவரை நோக்கி, "செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். 14நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர். 22நல்லவரது சொத்து அவருடைய மரபினரைச் சேரும்; பாவி சேர்த்த செல்வமோ கடவுளுக்கு அஞ்சி நடப்போரை வந்தடையும். 24பிரம்பைக் கையாளதவர் தம் மகனை நேசிக்காதவர்; மகனை நேசிப்பவரோ அவனைத் தண்டிக்கத் தயங்கமாட்டார். 1 கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்; உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும்.
2கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும்.
3ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்; கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்; அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. (சேலா)
4இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்;
5என் எதிரிகள் எனக்குச் செய்ய விரும்பும் தீமையை அவர்கள் மேலேயே அவர் திருப்பிவிடுவாராக! 'உம் வாக்குப் பிறழாமைக்கு ஏற்ப அவர்களை அழித்தொழியும்!
6தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்; ஆண்டவரே, உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று.'
7ஏனெனில், அவர் என்னை எல்லா இன்னல்களினின்றும் விடுவித்துள்ளார்; என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாராக் கண்டுள்ளேன்.லூக். 1:7, 11-14, ...Click for Read
நீதி 13:22,24....Click For Read
இசை 54:1-7....Click For Read
தேர்வில் வெற்றிபெற செபம்
அறிவின் உறைவிடமாகிய பரிசுத்த ஆவியானவரே, எனது படிப்பையும், படிக்கும் பாடங்களையும் உமது அருளினால் நிரப்பும். ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் நீரே எனது பாதுகாவழும், அடைக்கலமுமாக இருந்தருளும். உமது ஞானத்திலும் அறிவிலும் அனுதினமும் என்னை வளர்த்து உம்முடைய விரல்களினால் தேர்வுகள் எழுத எனக்கு ஆசி அருளும். படிப்பில் உள்ள கவனக் குறைவையும், தேர்வு நேரங்களில் உள்ள பயத்தையும், என்னிடமிருந்து அகற்றியருளும். தன்னம்மிக்கையும், எதிர்நோக்கும் அளித்து என்னை உறுதிப்படுத்தும். கடினமான தேர்வுகளை எதிர்கொள்ளும் மனஉறுதியை தாரும். வெற்றியடையும் வேளையில் உம்மை மகிமைப்படுத்துவதற்கான கிருபையை என்னில் பொழிந்தருளும் இந்நேரத்தில் பலிபீடத்தில் ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலிகளோடு சேர்த்து என் படிப்பையும், தேர்வுகளையும் நித்திய பிதாவிற்கு பலியாய் சபர்ப்பிக்கிறேன். பரிசுத்த தேவதாயே, என்னையும் என் படிப்பையும் இறை சந்நிதிக்கு உயர்த்தியருளும். ஆமென்.
வேலைவாய்ப்பிற்காக செபம்
தியானிக்க : 2 தெச 3:10-12....Click for Read
10"உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது" என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம். 11உங்களுள் சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம். 12இத்தகையோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம். சீராக் 10:30....Click For Read
30ஏழையருக்குத் தங்கள் அறிவாற்றலால் சிறப்பு; செல்வருக்குத் தங்கள் செல்வத்தால் சிறப்பு.
வியாபாரம் / தொழில் விருத்திபெற செபம்
இயேசுவே ! உமது மகத்துவமிக்க திருநாமத்தை போற்றி புகழ்கின்றோம். உமது கரத்திலிருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட எல்லா கொடைகளுக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறோம். எங்களுக்கு நல்ல தொழில் (வியாபாரம்) இவற்றை தேர்தெடுத்து தந்து எங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டி வரும் உமது மேலான மகிமைக்கு நன்றி கூறுகிறோம். எங்களது தொழில் (வியாபாரத்தில்) சிறந்த முன்னேற்றம் தந்தருளும். இதில் ஏற்பட்டுள்ள போட்டி, பொறாமை ஆகிய தீமைகளிலிருந்து எங்களை உமது அன்புக் கரத்தால் பாதுகாத்தருளும். எத்தகைய தீமையும், தீவினையும், தீயசக்தியும் எங்களை மேற்கொள்ளவிடாதேயும். உமது அருளும், ஆற்றலும், பாதுகாக்கும் கரங்களும் எங்கள் மீதும், நாங்கள் நடத்தும் தொழிலும் (வியாபாரத்திலும்) முழுமையான ஆதரவு தந்து எங்களை முன்னேற்றுமாறு உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம். ஆமென். 1 பர 1 அருள் 1 திரி
கடன் தொல்லையிலிருந்து விடுபட செபம்
இயேசுவே ! எங்கள் மீது நீர் காட்டும் கருணைக்கும், கரிசனத்துக்கும் நன்றி கூறி உம திருநாமத்தைப் போற்றிப் புகழ்கின்றோம். எங்களது அன்றாட வாழ்வில் ஏற்படும் பற்பல பிரச்சனைகள், சூழ்நிலைகள், கடன் தொல்லைகள், சந்திக்கும் அவமானங்கள், கேட்கும் அவதூறுகள் அனைத்தையும் உம் பாதத்தில் எங்கள் உடைந்த உள்ளங்களோடும் கண்ணீரோடும் உமக்கு காணிக்கையாக்குகிறோம். அஞ்சாதே, நான் உனக்கு ஆறுதலும் விடுதலையும் தருவேன் என்ற உம வாக்கினால் திடம் பெறுகிறோம். எங்களது இப்போதைய சிக்கல்கள், பிரச்சனைகளிலிருந்து எங்களை மீட்டருளும். (தேவைகளைக் குறிப்பிடவும்) உம்மிடமிருந்து மட்டுமே பெரும் நிலையான அமைதியையும், ஆறுதலையும் அளித்து ஆசிர்வதிக்கும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். எங்களை முன்னேற்றுமாறு உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம். ஆமென். 1 பர 1 அருள் 1 திரி
உடல் நலம் பெற செபம்
தியானிக்க : ஏரே. 33:6, மத். 14:14 இயேசுவே ! உம்மை வாழ்த்திப் போற்றி ஆராதிக்கின்றேன், என் வாழ்விலும் தாழ்விலும், உடல் நலத்திலும், நோயிலும் உம்மை அண்டிவர எனக்கு வாய்ப்பு தந்திருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றேன். மருத்துவர்க்கெல்லாம் மருத்துவராகிய அற்புதரே ! உடல் நலம் இல்லாமல் (நோயைக் குறிப்பிடுக)... ஆல் வருந்தி, வாடி சோர்ந்திருக்கும் என்னை கண்ணோக்கும், அதிசய சுகம்மாளிப்பவரே என்னையும் குணப்படுத்தும். நீர் ஒரு வார்த்தை சொன்னால் நான் குணமடைவேன். உமது பார்வையால் என் உடல், மனநோய்கள் பறந்தோடும். இந்த நோயினால் நாம் படும் வேதனைகள் எல்லாம், என் பாவங்களும், மற்றும் எல்லோரது பாவங்களுக்கும் பரிகாரமாக ஒப்புக்கொடுக்கிறேன். உம் திருக்கரத்தினால் என்னைக் குணப்படுத்துவது உமது சித்தமாயின் உமக்கு நன்றி. உம அளவு கடந்த ஞானத்திற்கேற்ப நான் இன்றும் துன்பப்பட வேண்டும் என்றால் அதற்கும் நான் தயார். உம்மோடு உமக்காக வாழ்வதே எனக்குக் கிடைக்கக்கூடிய மாபெரும் பேறு எனப் புரிந்துகொண்டு வாழ இயேசுவே எனக்கருள்புரியும். ஆமென். 1 பர 1 அருள் 1 திரி
தீய சக்திகளை நிர்மூலமாக்கும் செபம்
இறை சந்நிதியில் பரிசுத்தர்,பரிசுத்தர்,பரிசுத்தர் என நன்றாக பாடித் துதிக்கும் தூதர் சேனையோடு இணைந்து; அசுத்த ஆவிகளே, தீய சக்திகளே, சத்ருக்களே நீங்கள் யாராக இருந்தாலும் சரி, இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட என்னுடைய (எங்களுடைய) உள்ளத்திலிருந்தும், குடும்பத்திலிருந்தும், நோய்களிலிருந்தும் அடித்து விரட்டி, சிலுவையின் அடியில் சமர்ப்பிக்கின்றோம். அனைத்து தீமைகளையும் உருவாக்குகிறவனும், கற்றுத் தருபவனுமான சாத்தனே, இயேசுவின் விலையேறப்பெற்ற திரு இரத்தத்தின் பலனால் சகல தீக்கணைகளிலிருந்தும் நோய்களிலிருந்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பாவிகள் முதல் பரம பரிசுத்தர் வரை அனைவருக்காகவும் போரிடும் தூதர் சேனைகளோடு இணைந்து இச்செபத்தை நித்திய பிதாவிற்கு சமர்ப்பிக்கிறோம். ஆபிரகாமின் தெய்வமே ! ஈசாக்கின் தெய்வமே ! யாக்கோபின் தெய்வமே ! எங்களுக்கு உதவியருளும். நற்கருணையின் நித்திய பேறுபலன்களும் இந்நேரத்தில் ஒப்புக் கொடுக்கப்படும் அனைத்து திருப்பலிகளோடும் இணைந்து எங்களுடைய செபங்களை உமக்கு காணிக்கையாக்குகிறோம். ஆமென் 1 பர 1 அருள் 1 திரி
நன்றி செபம்
இயேசுவே! என் மேல் நீர் பொழிந்தருளிய எல்லா நன்மைகளுக்காகவும் முழந்தாளிட்டு உமக்கு மனம் நிறைந்த என் நன்றியை செலுத்துகிறேன். உமது இரக்கத்தை நான் என்றும் போற்றிப் புகழ்வேன். நீர் ஒருவரே என் இறைவன். என் தூயவன், என் புரவலர் என்று பறைசாற்றுவேன். என் நம்பிக்கை எல்லாம் இனி உம்மில்தான். உமது இரக்கத்தையும் வல்லமையையும் எங்கும் விளம்பரம் செய்வேன். உமது பேரன்பையும், பெரும் செயல்களையும் எல்லோரும் ஏற்றிப் போற்றுவார்களாக. இயேசுவின் பக்தி மக்கள் உள்ளங்களில் எல்லாம் அதிகதிகமாகப் பரவுவதாக. உமது உதவியைப் பெற்று மகிழும் அனைவரும் உமது குழந்தைப் பருவத்திற்கு என்று நன்றி உள்ளவர்களாக இருந்து என்றென்றும் அவர்கள் உம்மைப் போற்றி மகிமைப்படுத்துவார்களாக. ஆமென். 1 பர 1 அருள் 1 திரி
இதய நோயாளிகளுக்கான செபம்
அன்பினால் துடிக்கும் இதயத்துடன் மனிதர்களை நோக்கும் அன்பு தந்தையே இறைவா! உம்முடைய தெய்வீக வழிநடத்துதலுக்கும், உம் சித்தத்திற்கும் ஒவ்வொரு நோயாளியையும் சபர்பிக்கிறோம். ஒரு நாளின் 24 மணி நேரத்தின் ஒவ்வொரு நிமிடத்திலும், ஆரோக்யமும் உயிரும் அளித்து மிகக் கவனமாகக் காத்து வழிநடத்தும், உம்முடைய கரங்களில் எங்களை முழுமையாக கையளிக்கிறோம். எதனை வயது வரை வாழ்ந்தாலும், எது நடந்தாலும் உம்மிலிருந்து எங்களை ஒருபோதும் அகலவிடாதேயும். உம அன்பு மக்களென இந்நாள்வரை எவ்வித ஆபத்துமின்றி எண்களைக் காத்து மீட்ட அன்பு பிதாவே, ஆரோக்கியமுள்ள நாட்களில் நோயைக் குறித்தும், வசதியுள்ள நாட்களில் வறுமையைக் குறித்தும் சிந்திக்க கற்றுத்தாரும். "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்" என்று மொழிந்த இயேசுவே, அழைத்தவரின் அழைப்புக்கு ஏற்ற வாழ்வு வாழ அருள்தாரும். திறந்த உள்ளமும்,புன்சிரிக்கும் உதடுகளும் ஆறுதல் மொழிகளும் கொண்டு வாழ எங்கள் வாழ்நாளை உமக்கு சமர்ப்பிக்கிறோம்.
கர்ப்பிணிப் பெண்களுக்கான செபம்
பரிசுத்த கன்னி மரியே, இறை மகன் இயேசுவை உம திரு உதரத்தில் தாங்கி, நேரம் முழுமையடைந்தபொழுது இயேசுவை ஈன்றெடுத்தீரே. இயேசுவே என் மீதும் கருவிலுள்ள குழந்தையின் மீதும் இரக்கமாயிரும். நான் உட்கொள்ளும் மருந்துகளையும், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களையும், பணிவிடை புரியும் செவிலியர்களையும், உதவிபுரியும் குடும்பத்தினரையும், சந்திக்கும் நபர்களையும் ஆசீர்வதியும். பிரசவத்தை குறித்த பயம், வேதனை, மனக்கவலை இவற்றை மாற்றி சுகப்பிரசவம் அளித்து ஆசீர்வதியும். எனது குழந்தை நல்ல ஆரோக்கியமும், சுகமும், சௌபாக்கியமும், அழகும் அளித்தருளும். உம்முடைய கண்மணியாக வளரவும், வளர்க்கவும் என் தாய்மையை ஆசிர்வதித்தருளும். என் நல்ல தாயே, ஜெருசலேம் மாதாவே இச்செபத்தை இயேசு கிறிஸ்துவின் வழியாக நித்திய பிதாவிற்கு சமர்ப்பிக்கிறோம். ஆமென்.
பகைவர் / நண்பர்களுக்காக செபம்
ஆண்டவரே என் பகைவர்களையும், நண்பர்களையும் ஆசீர்வதியும். அவர்களையும், அவர்களின் குடும்பத்தையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் எல்லா தீமைகளுக்கும் நீங்கலாகிக் காத்தருளும். எனக்கேற்பட்ட நோய்களோ, எனது தோல்விகளோ, எனது வீழ்ச்சிகளோ, பாவத்திற்கு ஏதுவான சூழ்நிலைகளோ ஒருநாளும் அவர்களுக்கோ அவர்களின் தலைமுறைகளுக்கோ ஏற்படாமல் இருப்பதாக. ஆண்டவரே அவர்களுடைய வேலையையும், நிறுவனங்களையும் உம்முடைய பரிசுத்த திருஇரத்தத்தினால் பாதுகாத்து ஆசிர்வதித்தருளும். சாத்தானின் தாக்குதல்களிருந்தும் அகால மரணத்திலிருந்தும் எப்போதும் அவர்களைக் காத்து உம்முடைய திருஇருதய பேழைக்குள் வைத்து பாதுகாத்தருளும். அவர்களுடைய குடும்பத்தில் அன்பும் சமாதானமும், மகிழ்ச்சியும், சுகமும், செல்வமும் அளித்து அனுதினம் ஆசீர்வதியும். விசுவாசமும் பற்றுறுதியும் அளித்து அவர்களை உயர்த்தியருளும். ஆமென். 1 பர 1 அருள் 1 திரி
குருக்களுக்கான மன்றாட்டு
அன்பான ஆண்டவரே ! குருக்களை காப்பாற்றும்படியாக உம்மை மன்றாடுகிறேன். அவர்களுடைய வாழ்க்கை திருப்பலிப் பீடத்தில் பணிபுரிவது என்பதால், அவர்களைச் சிறப்பாக காப்பாற்ற வேண்டுகிறேன். அவர்கள் உலகைக் சார்ந்தவர்கள் அல்ல. ஆனாலும் உலகின் நடுவில் வாழ்கிறார்கள். பல்வேறு உலக இன்பங்களும் நாட்டங்களும் அவர்களைச் சோதிக்கின்றன. எனவே, அவர்களை உமது இதயத்தில் வைத்துப் பேணிட மன்றாடுகிறேன். அவர்கள் தனிமையில் தவிக்கும்போது, துன்பங்களினால் வாடும்போது, அவர்களுடைய தியாக வாழ்வே வீண் எனத் தோன்றும்போது அவர்கள் அருகிலிருந்து காப்பாற்றும். அவர்களின் அருட்பணிகள் பலன் தருமாறு அவர்களை ஆசீர்வதியும். ஆமென்.
படுக்கை நோயாளிகளுக்கான செபம்
அருளின் முழு நிறைவே இறைவா ! உலகிலுள்ள அனைத்து நோயாளிகளையும், படுக்கை நோயாளிகளையும் உமக்கு சமர்ப்பிக்கிறோம். காயப்பட்டதைக் கட்டும், வலிமையற்றதை வலுப்படுத்தும், நல்ல ஆயனாம் இயேசுவே, உம்முடைய ஆணி பாய்ந்த உம் கரங்களில் நான் அடைக்கலம் புகுகின்றேன். பாவியாகிய என் மேல் உம் இரக்கத்தைப் பொழிந்தருளும். எண்ணிலடங்கா என் பாவங்களை துடைத்து நீக்கி, பரிசுத்தமான ஒரு இதயத்தை எண்ணில் உருவாக்கும். கடின வேதனையில் தளராமல் செபித்த இயேசுவே, நான் பலிப் பொருளாகவும், எனது நோய்கள் அனைத்தும் பலி பீடமாகவும் மாறட்டும். நீர் அனுமதிக்கும் வேதனைகளை சகிக்க வலிமையும், பொறுமையும், விசுவாசமும் அளித்தருளும். நான் உம்மில் உருமாற்றமடைய அருள்தரும். எனக்கு உதவுபவர்களையும், பணிவிடை செய்பவர்களையும் ஆசீர்வதியும். இயேசு, மாரி, சூசையே, நரக சத்ருக்களின் தாக்குதல்களில் நீங்கள் எனக்கு கேடயமும், கவசமுமாய் இருந்தருளும். இச்செபங்களையெல்லாம் பரிசுத்த தேவ மாதாவின் மூலம் இயேசுவின் வழியாக நித்திய பிதாவிற்கு காணிக்கையாக்குகிறேன். ஆமென்.
இறந்தோருக்காக வேண்டுதல்
இறந்தோரிடமிருந்து இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழத்ச் செய்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா, சாவுக்குரிய எங்கள் உடலுக்கும் நீர் உயிர் அளிப்பவர் என்பதால், இறந்த உம் அடியார்....... (பெயர்)க்காக நாங்கள் விசுவாசத்துடன் வேண்டுதல் புரிகிறோம். உம் திருமகனோடு மகிமையில் உயிர்ததெழும்படி இவர் அவரோடு திருமுழுக்கில் புதைக்கப்பட்டார். விசுவாசத்துடனும் விருப்புடனும் இவர் உண்ணும்படி வானக உயிருள்ள அப்பத்தை இவருக்கு அளித்தீர். நாங்கள் உருகும் உள்ளத்தோடு இவருக்காக செய்யும் வேண்டுதல்களுக்குச் செவிசாய்த்தருளும். சாவுக்குரிய தளைகளிலிருந்து இவரை விடுவித்து, உயிர்த்தெழும் நாளில் இவர் உம் திருமுன் வந்து சேரவும், உம் புனிதரோடு பேரின்ப மகிமையில் பங்குபெறவும் அருள்வீராக. உயிருள்ள இறைவனின் திருமகனாகிய கிறிஸ்துவே. உம் நண்பர் இலாசரைச் சாவினின்று உயிர்த்தெழச் செய்தீரே, உமது திருஇரத்தத்தால் நீர் மீட்டருளிய இந்த அடியாருக்குப் புதுவாழவும் மகிமையும் அளித்தருளும். உம்முடைய ஐந்து காயங்களை முன்னிட்டு வேண்டுகிறோம். உத்தரிக்கிற நிலையில் உள்ளவர்கள், யாரும் நினையாத நிலையில் செப உதவி பெற இயலாதாவர்கள், குறிப்பாக ......... (பெயர்) ஆகியோரின் வேதனையைக் குறைத்து இவர்களை விண்ணரசில் சேர்த்துக் கொள்ளும்படி மன்றாடுகிறோம். நயீன் ஊர்க் கைபெண்ணின் ஒரே மகனுக்கு உயிர் கொடுத்து, உம் பரிவிரக்கத்தால் அவருடைய கண்ணீரைத் துடைத்தீரே, நாங்கள் அன்பு செய்தவரை இழந்து அழுது புலம்பும் இந்நேரம் எமக்கு ஆறுதல் அளித்தருளும். "இவருக்கு முடிவில்லா வாழ்வு ஒன்று உண்டு. இவரது வாழ்வு மாறுபட்டுள்ளதேயன்றி, அழிக்கப்படவில்லை. இவருக்காக விண்ணகத்தில் நிலையான வீடு ஆயத்தமாயிருக்கிறது" என்ற திண்ணமான உண்மையை எண்ணி, நாங்கள் அமைதிபெற அருள்வீராக. உமது பேரிரக்கத்தால் ஆண்டவரே, இவருக்கு முடிவில்லா இளைப்பாற்றியை அளித்தருளும். உம் அடியார் ........(பெயர்) தம்மைப் படைத்தவரும் மீட்பவருமாகிய உம்மை விரைவில் கண்டு என்றென்றும் மகிழச்செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.
உத்தரிக்கிற ஆத்துமாக்களின் ஜெபம்
திவ்விய இயேசுவே, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிரும். தாவீது அரசனின் புத்திரனாகிய இயேசுவே, சிலுவை பாரத்தால் அதிகரித்த காயங்களின் கொடிய வேதனைகளைப் பார்த்து இறந்துபோன உம் அடியார் .................. அவர்களை உமது பிரத்தியட்சணமான தரிதனத்தில் பார்த்து உமது மகிமையில் ஏற்றுக்கொள்ளும் பொருட்டு அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.சர்வ வல்லப பரிசுத்தரே எங்கள் பேரிலும், உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்கள் அனைவர் பேரிலும் இரக்கமாயிரும். -ஆமென். 1 பர 1 அருள் 1 திரி
தேர்வு எழுதுவோருக்காக ஜெபம்
ஞானத்தின் ஊற்றே இறiவா! எங்களின் இந்த இளம் வயதில் பல நன்மைகளை எங்களுக்குப் பொழிந்து வழிநடத்தி வந்த நேரங்களை நன்றியோடு நினைக்கிறோம்.. எங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வுகளை எழுதவிருக்கும் நாங்கள், இந்த இறுதி நாட்களில் எங்கள் பாடங்களைக் கடின முயற்சியுடன் படித்து, தேர்வுகளைச் சிறப்பாக எழுதி முடிக்கவும், அனைத்து தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறவும், தேவையான ஞானத்தையும், நினைவாற்றலையும், தெளிந்த மனதையும் உடல் உள்ள வலிமைகளையும் எங்களுக்கு கொடுத்தருளுமாறு உம்மைத் தாழ்மையோடு வேண்டுகிறோம். ஞானத்தின் இருப்பிடமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். - ஆமென்.
பிறந்த நாள் மகிழ்வில் செபம்
அன்புத் தந்தையே இறைவா! உம்மைப் போற்றுகிறேன். புகழ்கிறேன். என் பிறந்த நாளாகிய இன்று உமக்கு நன்றி நவில்கிறேன். “நீர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே. இன்று அக்களிக்கிறேன். அகமகிழ்கிறேன்” (திபா 118:24). இந்த நாளுக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன். நீ பிறக்கு முன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்.”(எரே 1:5) என்ற உம் வாக்கிற்கேற்ப தாயின் வயிற்றிலிருந்தே நீர் எனக்கு அரணும், கோட்டையும், அடைக்கலமுமாய் இருந்து வருவதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். உலகம் தோன்றுவதற்கு முன்பே கிறிஸ்து வழியாக என்னைத் தேர்ந்தெடுப்பதற்காக (எபே 1:4) உமக்கு நன்றி கூறுகிறேன். என் தாய், என்னை இந்த மண்ணில் ஈன்றெடுத்த அந்த நாளுக்காகவும், நேரத்துக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறேன். இறைவா, வாழ்வு என்னும் கொடைக்காக உமக்கு நன்றி. எத்தனையோ குழந்தைகள் பிறந்த பின்பு இறந்து விடுகின்றன. நிரோ என்னை வாழ வைத்துள்ளீர். உமக்கு நன்றி கூறுகிறேன். நான் இருப்பதும், இயங்குவதும் வாழ்வதும் உமது அருளாலே தான்.என்னை வாழ வைப்பதற்காக உமக்கு நன்றி. நான் பிறந்த நாளிலிருந்து இன்று வரை-இத்தனை ஆண்டு காலமாக என்னைச் சாவினின்றும் நோய்கள் பிணிகள், ஆபத்துகள், விபத்துகள் –அனைத்தினின்றும் என்னைக் காத்து வந்திருப்பதற்காக உமக்கு நன்றி. இளமையிலிருந்தே நீர் எனக்குத் தந்திருக்கிற திறமைகள் ஆற்றல்கள் நற்பண்புகள், தலைமைப் பண்புகள் என்னும் அனைத்துக் கொடைகளுக்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றேன். இளமையிலிருந்தே துன்பப் புயல்கள் என் மகிழ்ச்சித் தீபத்தை அணைத்து விடாதிருக்க, வசந்தத் தென்றல்களையே என் வாழ்வில் வீசச் செய்த உம் கருணைக்காக நன்றி! என் நண்பர்கள், தோழியர், என்னை அன்பு செய்வோர், என்னை அன்பு செய்வோர், என்னைப் பயிறறுவித்தோர், எனக்கு வழிகாட்டியவர்கள்-அத்தனை பேரையும் இன்று நினைவு கூர்ந்து அவர்களுக்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.அவர்கள் வழியாக என் வாழ்வை இனிமைப்படுத்தினீரே, உமக்கு நன்றி.! இறைவா, இதுவரை நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து உமக்கு நன்றி கூறுகின்றேன். “உம் அருள் நலமும்,பேரன்பும் என்னைப் புடைசூழ வந்ததற்காக” (திபா23:6) உமக்கு நன்றி. என் வாழ்க்கைப் பாதையில் நான் சந்தித்த நல்ல இதயங்கள், அடைந்த வெற்றிகள், மகிழ்வின் நேரங்கள், சாதித்த சாதனைகள் ஒவ்வொன்றிற்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றேன். கடந்த காலத்தில் அடைந்த தோல்விகள், துயரங்கள், நோய், துன்பங்கள், வேதனைகள்-இவற்றுக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறேன். இந்த அனுபவங்கள் மூலம் நான் கற்றுக்கொண்ட தெளிவுகளுக்காக நன்றி! இறைவா, இந்த இனிய நாளில் உமது ஆசியை வேண்டுகிறேன்.“இன்று முதல் உங்களுக்கு நான் ஆசி வழங்குவேன்” (ஆகா2:19) என்று மொழிந்தவரே, உமது ஆசியை எனக்குத் தாரும். சாலமோனுக்கு ஞானத்தை வழங்கியவரே, “ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை” (1அர3:12) எனக்குத் தாரும். உம் தூய ஆவியால் என்னை நிரப்பும். ஆண்டவரே, இன்னும் எத்தனை ஆண்டுகள் எனக்கு வாழ்நாளாக வழங்கியிருக்கிறீரோ, அத்தனை ஆண்டுகளும் உமக்கு நன்றியோடு வாழச் செய்யும். உமது திருவுளத்தையே நான் விரும்பச் செய்யும். விண்ணுலகில் நான் புதுப்பிறப்பு அடைந்து, உம்மோடு நான் மாபெரும் பிறந்த நாள் கொண்டாடும் வரையில் நீரே மாட்சிமைப்படுவீராக! ஆமென்
குழந்தையின் பிறப்பில் செபம்
அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். மகிழ்கிறோம். கொடைகளின் நாயகனே, உம்மை வாழ்த்துகிறோம்.வணங்குகிறோம். அருட்கொடைகளின் ஆண்டவரே இக்குழந்தை என்னும் அன்பின் கொடைக்காக நன்றி கூறுகிறோம். இக்குழந்தை உமது பரிசு. உமது அன்பின் வெளிப்பாடு. நீரே இக்குழந்தையை எங்களுக்கு இரக்கமுடன் ஈந்திருக்கின்றீர். உமக்கு நன்றி. தாயின் கருவில் இக்குழந்தைக்கு உரு தந்தவர் நீரே. இதன் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே. வியத்தகு முறையில் இக்குழந்தையைப் படைத்ததால் உமக்கு நன்றி நவில்கிறோம் (திபா 139:13-14). ஆண்டவரே, இக்குழந்தையால் இக்குடும்பத்திற்கு நீர் தந்துள்ள மகிழ்ச்சிக்காக, எழுச்சிக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். ஆண்டவரே இக்குழந்தையை நாங்கள் உமக்கே அர்ப்பணிக்கிறோம். இக்குழந்தை உம்முடையது. வாழ்நாள முழுவதும் உமக்கே அர்ப்பணிக்கப்பட்டதாக இருக்கட்டும்(1சாமு 1:28). இறைவா, இக்குழந்தையை உம் தூய ஆவியால் நிரப்பும். உமது ஞானத்தால் நிரப்பும். குழந்தை இயேசுவைப் போல இக்குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிரம்பட்டும். ஞானத்திலும், உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்ததாய்த் திகழட்டும்(லூக்2:40,52) ஆமென். நன்றி ஆண்டவரே!போற்றி, இறைவா! ஆமென்
புத்தாண்டின் புலர்வில் செபம்
அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறேன். புகழுகிறேன்.நன்றி கூறுகிறேன். ஆண்டவரே, இந்தப் புதிய நாளுக்காகவும் இந்தப் புதிய ஆண்டுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் படைத்த வெற்றியின், மகிழ்வின் ஆண்டு இதுவே. இந்த ஆண்டு முழுவதும் நாங்கள் அக்களிப்போம்.அக மகிழ்வோம்.(திபா118:240 உமக்கு நன்றி கூறுவோம். இறைவா, கடந்த ஆண்டு முழுவதும் நீர் எங்களை காத்துக் கொண்டதற்காக உமக்கு நன்றி. தீமைகளிலிருந்து எங்களை விடுவித்தீர். நன்மைகளால் எங்களை நிரப்பினீர். அதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். ஆண்டவரே இந்தப் புதிய ஆண்டில் உமது ஆசீருக்காக உம்மை மன்றாடுகிறோம். “கடவுளே எம்மீது இரங்கி எமக்கு ஆசீ வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!”(திபா67:1). “கடவுளே, மெய்யாகவே நீர் எங்களுக்கு ஆசி வழங்கி எங்கள் எல்லைகளைப் பெரிதாக்குவீராக! உம் கை எங்களோடு இருப்பதாக! தீங்கு எங்களைத் துன்புறுத்தாது நீர் பாதுகாத்தருள்வீராக!”(1 குறி 4:10). “எம் தலைவராம் ஆண்டவரே! இதுவரை நீர் எங்களை வழிநடத்தி வந்தமைக்கு நாங்கள் யார்? எங்கள் குடும்பம் யாது? இருப்பினும் ஆண்டவரே, உம் வார்த்தையை முன்னிட்டும், உம் .இதயத்திறகு ஏற்பவும் மாபெரும் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றினீர்”(2சாமு 7:18,21) “தலைவராம் ஆண்டவரே, நீரே கடவுள். உமது வார்த்தைகள் நம்பிக்கைக்கு உரியவை. இந்த நல்வாக்கை அடியேனுக்கு அருளியவர் நீரே. உம் ஊழியனின் குடும்பம் என்றும் உம் திருமுன் இருக்குமாறு நீர் அருள் கூர்ந்து அதற்கு ஆசி வழங்கும்! தலைவராகிய நீர் உரைத்துள்ளீர். உம் ஊழியனின் குடும்பம் என்றும் உமது ஆசியைப் பெறுவதாக!(2சாமு7:28-29). ஆண்டவரே, இந்த ஆண்டு ஆசிகளின் ஆண்டாக அமையட்டும். நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து எங்கும் வளர்ச்சி நிலவட்டும். வறுமை ஒழியட்டும். இந்த ஆணடில் நன்மைகள் பெருகி தீமைகள் குறையட்டும். இறைவா, உலகிற்கு சமாதானம் அருளும். உலகில் போர்கள் நீங்கி அமைதி உருவாகட்டும்.நோய்கள் குறைந்து நலம் பெருகட்டும். பகைமை மறைந்து அன்பு மலரட்டும். இந்த ஆண்டு முழுவதும் உமது ஆசி குறைவின்றி எங்களோடு தங்கட்டும். நீரே மாட்சிமைப்படுவீராக! உமக்கு நன்றி. உமக்கு புகழ், உமக்கு மகிமை!.ஆமென்.
வெற்றியின் வேளையில்
அப்பா, தந்தையே, உம்மைப் போற்றுகிறேன். என் வாழ்வின் நாயகனே உம்மை வணங்குகிறேன். வெற்றி வேந்தனே, உமக்கு நன்றி கூறி உம்மை தொழுகிறேன். என் வெற்றியின் தருணத்தில் உமக்கு நான் நன்றி கூறுகிறேன்.இந்த வெற்றி உமது வெற்றி. உமது அருளாசி இன்றி இவ்வெற்றியை நான் அடைந்திருக்க முடியாது. எனவே உமக்கு நன்றி கூறுகிறேன். “எங்களுக்கன்று, ஆண்டவரே! எங்களுக்கன்று. மாட்சிமையை உம் பெயருக்கே உரித்தாக்கும்.” (திபா115:1). ஆண்டவரே, இவ்வெற்றியில் நீரே மாட்சி அடைவீராக. “கடவுளாகிய ஆண்டவரே, என்னை இவ்வளவு உயர்த்தியமைக்கு எனக்கும் என் வீட்டாருக்கும் என்ன அருகதை? ஆயினும், கடவுளே, அதுவும் உமக்குச் சிறியதாய்த் தோன்றிற்று. நீர் உம் அடியான் பொருட்டு உம் திருவுளப்படி இத்தகைய மாபெரும் செயல்களைச் செய்துள்ளீர்.(1சாமு 7:18,19) “ஆண்டவரே, எம் தலைவரே, மாட்சியையும், மேன்மையையும் எனக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்”(திபா8:5).என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்.கை கூப்பி உமது பெயரை ஏத்துவேன்”(திபா63:4). ஆண்டவரே, எம் ஆற்றல்கள், திறமைகள், வெற்றிகள், பெருமைகள் அனைத்தும் எம் உழைப்பால் வந்ததல்ல. உமது அருளால் நாங்கள் பெற்றுக் கொண்டவையே. எனவே, உமக்கு நன்றி கூறுகிறோம். “எங்கள் கடவுளே, மாட்சியும் மாண்பும் வல்லமையும் பெற நீர் தகுதி பெற்றவர். ஏனெனில் அனைத்தையும் படைத்தவர் நீரே”(திவெ 4:11). எனவே உமக்கு புகழும் நன்றியும் செலுத்துகிறேன். இந்த நேரத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்காகவும், தோல்வியில் துவள்பவர்களுக்காகவும், விரக்தியில், நம்பிக்கையின்மையால் வாடுபவர் அனைவருக்காகவும் உம்மை மன்றாடுகிறேன். நீரே அவர்களை நிறைவான வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும். நீர் ஒருவரே எங்கள் நிலையான வெற்றி என்பதை அனைவரும் உணர்வார்களாக! உமக்கே புகழ். உமக்கு மட்டுமே மாட்சிமை. ஆமென்.
பெற்றோரைப் போற்றுகையில் செபம்
தாயும் தந்தையுமான இறைவா, உம்மைத் தாள் பணிந்து வணங்குகிறேன். போற்றிப் புகழ்கிறேன். தந்தை தம் பிள்ளைகளுக்கு இரக்கம் காட்டுவது போல, எங்களுக்கு இரக்கம் காட்டும் (திபா 103:13) இறைவனே, உம்மைப் போற்றுகிறேன். “தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல், நான் உங்களைத் தெறறுவேன்.” (எசா 66:13) என்ற உம் வாக்கறுதிக்கேற்ப, தாயைப் போல என்னைத் தேற்றுபவரே, உமக்க நன்றி கூறுகிறேன். இறைவா, நீர் எனக்கு மாபெரும் கொடையாகத் தந்துள்ள என் பெற்றோருக்காக உம்மைப் போற்றுகிறேன். எமக்கு நன்றி கூறுகிறேன். “உன் தந்தையை உன் முழு உள்ளத்துடன் மதித்து நட, உன் தாயின் பேறுகாலத் துன்பத்தை மறவாதே. அவர்கள் உன்னைப் பெற்றெடுத்தார்கள். அதற்கு ஈடாக உன்னால் எதையும் செய்ய முடியாது என்பதை நினைவில் இருத்து.” (சீரா 7:27-28) என்னும் இறைவாக்கிற்கேற்ப, ஈடு செய்ய முடியாத என் பெற்றோரின் அன்பு, பாசம், தியாகத்திற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். குழந்தைப் பருவத்திலிருந்து என்னை வளர்த்து, உருவாக்க என் பெற்றோர் மேறகொண்ட முயற்சிகளுக்காக உமக்கு நன்றி. என்மீது அவர்கள் பொழிந்த நிபந்தனையற்ற அன்புக்காக நன்றி. என் தவறுகள், குற்றங்களையெல்லாம் மன்னித்து, அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டதற்காக நன்றி. சில நேரங்களில் அவர்களை மனம் நோகச் செய்ததற்காக, அவர்களுக்கு நன்றி பாராட்ட மறந்ததற்காக, மனம் வருந்துகிறேன். மன்னியும். இறைவா, என் பெற்றோரை ஆசீர்வதியும். நீர் மட்டுமே வழங்க முடிகின்ற அமைதி, சமாதானம், நிறைவால் அவர்களை நிரப்பும். ஆண்டவரே, என் வாழ்விலும், பணியிலும் என் பெற்றோரை நான் பெருமைப்படுத்த அருள்தாரும். உலகின் அனைத்தப் பெற்றோரையும் நினைவுகூர்ந்து மன்றாடுகிறேன். ஆசீர்வதியும். தம் பிள்ளைகளால் அவர்கள் மேன்மை அடைவீர்களாக. தம் பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு, தனிமையில், முதியோர் இல்லங்களில், உறவினர் வீடுகளில் வாடும் பெற்றோரை உம் ஆறுதலால் நிரப்பும். “தாய் தந்தையை மதித்துப் போற்று” என்னும் உம் கட்டளையை எல்லோரும் நிறைவேற்றுவார்களாக. நீரே பெற்றோரில் மாட்சிமை பெறுவீராக. ஆமென்
நன்மையைக் காண்கையில் செபம்
நன்மைகளின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறேன்; புகழ்கிறேன்; நன்றி கூறுகிறேன். நீர் நல்லவர். நன்மைகள் அனைத்துக்கும் ஊற்று. நன்மையானது எதுவும் உம்மிடமிருந்தே வருகிறது. உமக்கே புகழ், உமக்கே நன்றி. இறைவா, வானங்கள் உமது மாட்சியை வெளிப்படுத்துகின்றன. வானவெளி உம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது (திபா 19:1). விண்ணும், மண்ணும், கடலும், மலையும், ஆறுகளும், பறவை, விலங்குகளும், இயற்கை அனைத்தும் உமது படைப்பே. உம்மைப் போற்றுகிறேன். இறைவா, “உமக்கு அஞ்சி நடப்போருக்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துனைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துனை மிகுதி” (திபா 31:19). உம்மைப் போற்றுகிறேன். இறைவா, உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடிக்கிறீர். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறீர். பசித்தோரை நலன்களால் நிரப்புகிறீர். செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறீர். (லூக் 1:53) உமக்கே புகழ், உமக்கே நன்றி.! ஆண்டவரே, இந்த உலகில் நடைபெறும் நன்மைகள் அனைத்துக்காகவும் உமக்கு நன்றி. எம் உறவினர், நண்பர்களுக்கு நீர் செய்து வரும் நன்மைகளுக்காக உமக்கு நன்றி. தீமையை ஒழித்து, நீதியை நிலைநாட்டுவதற்காக உமக்கு நன்றி. பிறர் வாழ தம்மையே கையளிக்கும் தியாகிகள், போராளிகள், சான்றோர், மறைசாட்சிகளுக்காக உமக்கு நன்றி. நாள்தோறும் நிகழும் அறிவியல் கண்டுபிடிப்புகள், நலந்தரும் ஆய்வுகள், கருத்துப் பரவல்கள, உலகை முன்னேற்றும் பணிகள் அனைத்திற்காகவும் உமக்கு நன்றி. நல்ல மனிதர்கள் ஒவ்வொருக்காகவும் உமக்கு நன்றி. இறைவா, உமது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு அவர்கள் நன்மைக்காகவே நீர் அனைத்தும் நிகழச் செய்கிறீர். (உரோ8:28). உமக்கு நன்றி செலுத்துகிறோம். நன்மையைக் கண்டு உளம் மகிழவும், நன்றி செலுத்தவும் நல்ல மனதை எங்களுக்குத் தாரும். உமக்கே புகழ், உமக்கே மாட்சி, உமக்கே நன்றி, ஆமென்.!
பாராட்டு பெறுகையில் செபம்
“என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன். உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.”(திபா 145:1). ஆண்டவரே, பேரன்பையும், இரக்கத்தையும் எங்களுக்கு மணிமுடியாகச் சூட்டினீரே. எம் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்பவரே (திபா 103:4-5), உம்மைப் போற்றுகிறேன். இறைவா, என் வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் நீர் பெற்றுத் தந்த பாராட்டுக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். இறைவா, என் வாழ்விலும், பணியிலும் நீரே பெருமை பெறுவீராக. உமக்கே மாட்சியும், வல்லமையும் என்றென்றும் உரித்தாகுக.(1பேது 4:11). “எங்களுக்கன்று, ஆண்டவரே, எங்களுக்கன்று. மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும். உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிடடு அதை உமக்கே உரியதாக்கும்.”(திபா 135:1). ஆண்டவரே, நீர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் உமக்கு என்ன கைமாறு செய்வேன்? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்த உமது பெயரைத் தொழுது போற்றுகிறேன். (திபா 116:12). இறைவா, இந்தப் பாராட்டை நான் பெறுவதற்கு காரணமாக, உறுதுணையாக இருந்த ஒவ்வொருவரையும் நினைவு கூர்ந்து உம்மைப் போற்றுகிறேன்; அவர்களுக்காக நன்றி கூறுகிறேன். அவர்களை ஆசீர்வதிக்க இறைஞ்சுகிறேன். “மனிதர் விரும்புவதாலோ, உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை. கடவுள் இரக்கம் காட்டுவதாலேயே எல்லாம் ஆகிறது.” (உரோ 9:16) என்னும் இறைவாக்கிற்கேற்ப, உமது இரக்கத்தாலேயே இதை நாங்கள் பெற்றுக் கொண்டோம். உமக்கு நன்றி கூறுகிறோம். ஆண்டவரே, தொடர்ந்து என் வாழ்வையும், பணியையும் உமக்கு அர்ப்பணிக்கிறேன். இனி எனது பேச்சு உமது வார்த்தைகளைப் போல் இருக்கட்டும். உமது ஆற்றலைப் பெற்றவர் போல் இனி நான் பணி செய்வேனாக.(1பேது 4:11). தந்தையே, இனி நான் “எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து, அவர் வழியாய்” (கொலோ 3:17) உமக்கு நன்றி செலுத்தவேனாக, ஆமென்
தோல்வியின் துயரத்தில் செபம்
அன்புத் தந்தையே, இறைவா, உம்மைப் போற்றுகிறேன். எங்களுக்கு வாழ்வில் வளமும், நலமும்,வெற்றிகளும் தருபவரே, உம்மைப் புகழ்கிறேன். எங்கள் கண்ணீரை எல்லாம் களிநடமாக மாற்றுபவரே, உமக்கு நன்றி செலுத்துகிறேன். என் வாழ்வில் எத்தனையோ நன்மைகளைப் பொழிந்தவரே, எத்தனையோ வெற்றிகளைத் தந்தவரே, உமக்கு நன்றி கூறுகிறேன். இப்போது நான் சந்தித்துள்ள இந்தத் தோல்விகளுக்காகவும் நான் உமக்கு நன்றி கூறுகிறேன். தோல்விகளையும் வெற்றிகளாய் மாற்றும் வல்லமை உடையவர் நீர், உம்மைப் போற்றுகிறேன். தோல்விகளின் வழியாக நாங்கள் கற்றுக் கொள்கிற பாடங்களுக்காக, பெற்றுக் கொள்கிற அனுபவங்களுக்காக நன்றி செலுத்துகிறேன். இந்தத் தோல்வியின் வழியாகவும் நீர் ஆசிகளைப் பொழிய இருப்பதற்காக நன்றி கூறுகிறேன். “கடவுளிடம் அன்பு கூர்பவர்களுக்கு எல்லாம் நன்மைக்காகவே நடைபெறுகின்றன.”(உரோ 8:28) என்று நான் நம்புகிறேன். நன்றி கூறுகிறேன். “ஆண்டவரே, உம்முடைய ஞானமும் அறிவும், எத்துனை ஆழமானவை! உம்முடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை. உம்முடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாறபட்டவை”(உரோ11:33) எனவே, இத்தோல்வியை நான் ஏற்றுக்கொள்கிறேன். உம்மைப் போற்றுகிறேன். “துயரத்தால் முகத்தில் வருத்தம் தோன்றலாம். ஆனால் அது உள்ளத்தைப் பண்படுத்தும்”(சஉ7:3) என்னும் வாக்கிற்கேற்ப இந்நிகழ்வு என் உள்ளத்தைப் பண்படுத்தும். ஆண்டவரே, இவ்வேளையில் உம் ஆறுதலால் என்னை நிரப்பும். “உங்களை உருவாக்கிய நானே உங்களைத் தாங்குவேன். நானே உங்களைச் சுமப்பேன். நானே விடுவிப்பேன்.”(எசா46:40 என்று மொழிந்தவரே, என்னைத் தாங்கிக் கொள்ளும். “என் வெற்றியை அருகில் வரவழைத்துள்ளேன்.அது தொலைவில் இல்லை”.(எசா 46:13) என்று மொழிந்தவரே!“பயனுள்ளவற்றை எனக்குக் கற்பிப்பவரும், செல்ல வேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே” இந்நேரத்தில் தோல்வியில் துவளும் எத்தனையோ சகோதர, சகோதரிகள், இளைஞர், இளம் பெண்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காக மன்றாடுகிறேன். தோல்வியின் விரக்தியில் தவிக்கும் அனைவருக்கும் ஆறுதலையும் புதிய நம்பிக்கையையும் வழங்கியருளும்.வெற்றியின் பாதைக்கு இட்டுச் செல்லும். உமக்கே புகழ்! உமக்கே நன்றி! உமக்கே மாட்சி! ஆமென்
எதிர்காலத்தை எண்ணுகையில் செபம்
“என் கடவுளே, என் அரசே!உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.”(திபா14. 5:1). ஆண்டவரே, காலங்களைக் கடந்தவரே நேற்றும், இன்றும், என்றும் மாறாதவரே, உம்மைப் போற்றுகிறேன். “அகரமும், னகரமும், முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும்”(திரு22:13) ஆனவரே, உமக்கு நன்றி கூறுகிறேன். இந்த நாள் வரையில் என்னை ஆசீர்வதித்து வழி நடத்தியவரே, உமக்கு நன்றி கூறுகிறேன். இனி வருகின்ற நாட்களிலும் என்னை, ஆசீர்வதித்து வழி நடத்த இருப்பவரே, உமக்கு நன்றி கூறுகிறேன். ஆண்டவரே, எனது எதிர்காலத்தை, இனிவர இருக்கிற வாழ்வின் நாட்களை உமது பாதங்களில் நம்பிக்கையுடன் அர்பணிக்கிறேன். நீரே ஆண்டு கொள்வீராக! நீரே ஆசீர்வதிப்பீராக. “நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளைய கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும்.”(மத் 6:34) என்று உறுதியளித்தவரே.உமக்கு நன்றி கூறுகிறேன். “ஆண்டவர் அண்மையில் உள்ளார். எதைப் பற்றியும் கவலைப்படவேண்டாம்”(பிலி4:6) என்று எங்களைத் தேற்றியவரே, உமக்கு நன்றி கூறுகிறேன். இறைவா, எனது எதிர்காலத்தைப் பற்றிய எனது கலலைகள், பயங்கள், ஏக்கங்கள், கனவுகள்-அனைத்தையும் உமது கரங்களில் தருகிறேன்.என்னை ஏற்றுக் கொள்ளும். என்னை நிறைவின் பாதையில் வழிநடத்தும். என் வாழ்நாளெல்லாம் “உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடை சூழ்ந்து”(திபா23:6) வருவதாக!“உம் கோலும், நெடுங்கழியும்” என்னை வழிநடத்துவதாக. ஆண்டவரே தங்கள் எதிர்காலத்தை எண்ணிக் கலங்குகிற, கவலைப்படுகிற சகோதர, சகோதரிகள் ஒவ்வொருவருக்காகவும் உம்மை மன்றாடுகிறேன். அவர்களை வழிநடத்துவீராக. “ஆண்டவரே, உம் பாதைகளை நாங்கள் அறியச் செய்தருளும். உம் வழிகளை எங்களுக்குக் கற்பித்தருளும்”.(திபா 25:4). எங்களுக்கு வலுவுட்டுகின்றவரே, உமது துணை கொண்டு எதையும் செய்ய எங்களுக்கு ஆற்றல் தருபவரே(பிலி4:13), உமக்கு நன்றி, உமக்கு புகழ். இன்றும், நாளையும் எங்கள் வாழநாள் முழுவதும், நீரே மாட்சிமைப்படுவீராக. ஆமென்.!
குழப்பத்தின் மத்தியில் செபம்
அமைதியின் நாயகனே, இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன்; புகழ்கிறேன். குழம்பிய மனங்களுக்குத் தெளிவும், தேறுதலும் தருபவரே, உம்மைப் போற்றுகிறேன். இந்த நாளுக்காகவும், சூழலுக்காகவும் உமக்கு நன்றி. என் மனம் குழம்பிப்போய், இருளடைந்து கிடக்கும் இந்த நேரத்துக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறேன். இந்தக் குழப்பத்தின் வழியாக நீர் எனக்குத் தெளிவை, புதிய திசையைக் காட்டப் போவதற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, “நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். நீர் அளிக்கும் விடுதலையால் என் இதயம் களி தரும்.”(திபா 13:5). ஆண்டவரே, “நீர் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்க மாட்டீர். உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்.”(திபா 16:10-11). எனவே, உம்மைப் போற்றுகிறேன். உலகின் ஒளியான இயேசுவே, ஆண்டவரே “நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர். என் கடவுளே, நீர் என் இருளை ஒளிமயமாக்குகின்றீர்” (தி.பா 18:28). எனவே, உமக்கு நன்றி கூறுகிறேன். “நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி உனக்கு அறிவுரை கூறுவேன்.”(திபா. 32:6) என்று மொழிந்தவரே, உமக்கு நன்றி கூறுகிறேன். ஆண்டவரே, உம் வாக்குறுதிக்கேற்ப என்னைக் கண்ணோக்கும். நான் நடக்க வேண்டிய பாதையைக் காட்டும். எனக்கு அறிவு புகட்டும் இறைவா. “ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும். உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி, எனக்குக் கற்பித்தருளும். ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள் உம்மையே நான் நாள் முழுவதும் நம்பியிருக்கிறேன்.” (திபா. 25:4,5). என் குழப்பத்தைப் போக்கி, எனக்கு ஒளியும், விழியும், தெளிவும் தருவீர் என்பதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். ஆண்டவரே, இந்நேரத்தில் குழப்பத்தில் மூழ்கித் தவித்துக் கொண்டிருக்கிற என் சகோதர, சகோதரிகளை எண்ணிப்பார்த்து, அவர்களுக்காகவும், மன்றாடுகிறேன். ஆசீர்வதியும் உமது ஞானத்தை அவர்கள் மீது பொழிந்து, வழி நடத்தும். ஆண்டவரே, நீரே எங்கள் ஞானம்; நீரே எங்கள் வெற்றி; ஆமென்
இருள் சூழ் வேளையில் செபம்
உலகின் ஒளியான இறைவா, உம்மைப் போற்றுகிறேன். புகழ்கிறேன். நன்றி கூறுகிறேன். “உலகின் ஒளி நானே;என்னைப் பின் தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” (யோவா 8:12) என்றவரே, உம்மைப் போற்றுகிறேன். அரசருக்கெல்லாம் அரசரே, ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவரே, அணுக முடியாத ஒளியில் வாழ்பவரே, (1திமொ 6:16), உமக்கு மாண்பும், ஆற்றலும் உரித்தாகுக! சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தவரே (2திமொ 1:10), உம்மைப் போற்றுகிறேன். ஆண்டவரே, நீரே என் ஒளி; நீரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? (திபா 27:1). உம்மைப் போற்றுகிறேன். “ஆண்டவரே, நீர் ஒளி மிக்கவர்.”(திபா 76:4). “உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!” (திபா 67:1). “ஆண்டவரே எங்கள் மீது உமது முகத்தின் ஒளி வீசும்படி செய்தருளும்.”(திபா 4:6). ஆண்டவரே, “சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.” (திபா 23:4). இறைவா, “இருள்கூட உமக்கு இருட்டாய் இல்லை; இரவும் பகலைப் போல் ஒளியாய் இருக்கின்றது. இருளும் உமக்கு ஒளி போல் இருக்கும்.” (திபா 139:12). இறைவா, “என் அகவிருள் அகற்றி அருளொளி வீசுவீராக”. “பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையைநிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.” (எசா 58:10) என்றவரே, என்னை ஒளியால் நிரப்பும். இறைவா, மனவிருள் சூழ்ந்து, மன நிறைவின்றி வாழும் என் சகோதர, சகோதரிகளுக்காக உம்மை வேண்டுகிறேன். உமது அன்பின் ஒளியால் அவர்களை சுடர்விடச் செய்தருளும். “எழு, ஒளி வீசு!உன் ஒளி தோன்றியுள்ளது” (எசா 60:1) என்ற உம் வாக்கிற்கேற்ப நாங்கள் ஒளி வீசுவோமாக; எங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்வதாக! (மத் 5:16). எங்கள் வாழ்வில் நீரே மாட்சிமைப்படுவீராக, ஆமென்
தடைகளின் மத்தியில் செபம்
தடைகளை வெல்லும் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறேன். புகழ்கிறேன். பணிகிறேன், தொழுகிறேன். “ஆண்டவரே, எண்ணிறந்தவற்றை நீர் எமக்கெனச் செய்துள்ளீர். உமக்கு நிகரானவர் எவரும் இலர்” (திபா 40:5). உம்மைப் போற்றிப் புகழ்கிறேன். “ஆண்டவரே, மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன். எல்லா இனத்தாரிடையேயும் உம்மை புகழ்ந்து பாடுவேன்.” (திபா 108:3). ஏனெனில், “என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர்.” (108:16). என் தடைகளை நீர் தகர்த்தெறிந்தீர். இறைவா, சாவின் தடைகளைத் தகர்த்தெறிந்தவரே, உம்மைப் போற்றுவேன். பாவத்தின் கட்டுகளை உடைத்தவரே, உம்மைப் போற்றுகிறேன். நோய், பிணி, மூப்பு, சோர்வு, அடிமைத்தனம், அநீதிகள்…. இவற்றின் பிணைகளை விரட்டியவரே, உம்மைப் போற்றுகிறேன். இயற்கையின் சீற்றங்களால் ஏற்படும் தடைகளை வீழ்த்தியவரே, உம்மைப் போற்றுகிறேன். மனிதரால் ஏற்படும் தடைகளை நீக்குபவரே, உம்மைப் போற்றுகிறேன். ஆண்டவரே, இந்நேரம் என் வாழ்வில் ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க உம்மை வேண்டுகிறேன். எங்கள் வலிமையினால், சொந்த உழைப்பனால், ஆற்றலினால் இத்தடைகளை எங்களால் மேற்கொள்ள இயலாது. ஆனால் நீர் விரும்பினால் இத்தடைகள் ஒரு நொடியில் விலகிப் போகும். நீர் விரும்புவீராக.! “ஆண்டவரே, நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றேன். நீர் அளிக்கும் விடுதலையால் என் இதயம் களிகூறும்” (திபா 13:5). இறைவா, “உம் துணையுடன் நான் எப்படையையும் நசுக்குவேன். என் கடவுளின் துணையால் எம்மதிலையும் தாண்டுவேன்.” (திபா18:29). உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி. இறைவா. இந்நேரத்தில் தம் வாழ்வின் தடைகளைக் கண்டு திகைத்து சோர்ந்து போய் நிற்கும் சகோதர, சகோதரிகளை எண்ணிப் பார்த்து, அவர்களுக்காக மன்றாடுகிறேன். ஆசீர்வதியும். வலிமைப்படுத்தும். தடைகளை நீக்கி மகிழ்ச்சிப்படுத்தும். “ஆண்டவரே, உமது வலிமையோடு எழுந்து வாரும். நாங்கள் உமது வல்லமையைப் புகழ்ந்து பாடுவோம்.” (திபா 21:13). ஆமென், ஆமென்.!.
ஏக்கத்தின் தா(க்)கத்தில் செபம்
“கடவுளே, நீரே என் இறைவன், உம்மையே நான் நாடுகிறேன். என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.” (திபா 63:1). உம்மைப் போற்றுகிறேன். வணங்குகிறேன். நன்றி கூறுகிறேன். ஆண்டவரே, எங்கள் இதயத்தின் ஏக்கங்களை நிறைவு செய்பவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏக்கம் நிறைந்த இந்த நேரத்தில், உம்மை நோக்கி என் இதயத்தை எழுப்புகிறேன். நீரே என் நிறைவு. நீரே என் முழுமை. நீரே என் தாகம், உமக்கு நன்றி செலுத்துகிறேன். “கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பதுபோல், கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. என் நெஞசம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது.(திபா 42:1,2). “யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும். என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்”. (யோவா 7:37) என்று அழைத்தவரே, உமக்கு நன்றி. தூய ஆவி என்னும் கொடையைத் தந்து என் ஏக்கத்தைத் தணியும். “தாகமாய் இருப்போர் என்னிடம் வரட்டும். விருப்பம் உள்ளோர் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாய்க் குடிக்கட்டும்.”(திரு 22:17) என்றவரே வாழ்வு தரும் நிரால் என் இதயத்தின் தாகத்தைத் தணியும். இறைவா, இந்நேரத்தில் பலவிதமான ஏக்கங்களால் வாடிக்கொண்டிருக்கும் சகோதர, சகோதரிகளை நினைவு கூர்ந்து அவர்களுக்காய் மனறாடுகிறேன். அவர்களின் இதய ஏக்கங்களை, ஆவல்களை நீரே தணித்தருளும். இறைவா, உலகப் பொருட்கள் மீதும், மனிதர்கள் மீதும் ஏக்கம் கொள்ளாமல், உமக்காக மட்டும் ஏங்குகிற உள்ளத்தை எனக்குத் தாரும். நீரே மனித இதயங்களின் இறுதி ஆவலாய் விளங்குவீராக! நீரே மாட்சிமைப்படுவீராக, ஆமென், ஆமென்.!